திருஞானசம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்

 திருஞானசம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்:


1)இயமகம் என்பது ஓரடியில் முன்வந்த சொல் அல்லது தொடர் வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வரும் அமைப்பாகும்.இது "யமகம்" என்றும் வழங்கப்படும். பிற்காலத்தில் பல பாடல்களில் இந்த அணி இடம் பெற்றுள்ளது. உதாரணமாய் அருணகிரிநாதரின் திருப்புகழில் வரும்,


"சுத்தப் பத்தி சித்ரச் சொர்க்க

சொர்க்கத்தத்தைக்-கினியோனே"


எனும் பாடலை கூறலாம். வடமொழி இசைப்பாடலில் நிறைய இடங்களில் இமயக அணி பயின்று வருகிறது. இவையாவும் 15 ம் நூற்றாண்டுக்கு பின் வந்த பாடல்களே, இவற்றிற்கெல்லாம் முதலில் விதை இட்டது நம் சம்பந்தர்பெருமானே,  இவர் இயற்றிய நான்கு பதிகங்கள் இவ்வமைப்பில் உள்ளது, இவை பழம்பஞ்சுரம் என்ற பண்ணில் உள்ளது. அவற்றில் ஒன்றான திருக்கழுமலம் பதிகத்தினை காண்போம், 


"உற்றுமை சேர்வது மெய்யினையே 

  உணர்வது நின்னருள் மெய்யினையே

கற்றவர் காய்வது காமனையே 

  கனல்விழி காய்வது காமனையே

அற்றம் மறைப்பதும் உன்பணியே 

  அமரர்கள் செய்வதும் உன்பணியே

பெற்று முகந்தது கந்தனையே 

  பிரம புரத்தை யுகந்தனையே"


இதில் பயின்றுவரும் "மெய்யினையே""காமனையே","உன்பணியே","கந்தனையே" ஆகிய சொற்கள் நான்கு வரியிலும் இருவேறு பொருள்பட மடங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2)இயற்பாவிலோ அல்லது இசையிலோ ஒரு சந்தத்திலே எடுத்து உடனே மாற்றிப்பாடுவது "முரி" என்ற வகையாகும், எடுத்த இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகம் இதுவாகும். தற்காலத்தில் பாடகர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமும் இதுவே. இதனை யாழ்முரி என்றும் வழங்குவர்.


திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் தலயாத்திரைச் சென்றபோது, யாழில் வாசிக்க முடியாத ஒரு பண்ணைப் பாடினார். அதனால் யாழ்ப்பாணர் யாழை முறிக்கச் சென்ற போது, அவரைத் தடுத்தாட் கொண்டார். எடுத்த தாளம் முரிய வேறு ஒரு தாளத்திலும், எடுத்த பண் முரிய வேறு ஒரு பண்ணிலும் மாற்றி இசைக்கும் முறை வரி எனப்படும்.


"மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

  நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்

  அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 

  இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

  எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே".

  

மேற்கண்ட சம்பந்தரின் திருத்தருமபுர பதிகம் யாழ்முரி வகையை சேர்ந்தது. இப்பதிகத்திற்குரிய பண்ணாக மேகராக குறிஞ்சிப்பண் குறிப்பிடப்படுகிறது.



Comments

Popular posts from this blog

திருஞான சம்பந்தரின் சிறப்புவாய்ந்த பதிகங்கள்-02: